ஐபிஎல் குற்றச்சாட்டுகள் : மூன்று வீரர்களுக்கும் பிணை கிடைத்தது

Image caption பிணை வழங்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த்

இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடான வழிகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் டில்லி நீதிமன்றம் ஒன்று பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வினய் குமார் கண்ணா காவல்துறையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

ஸ்ரீசாந்த், அக்னித் சவான் மற்றும் அஷோக் சண்டிலா ஆகியோர், 'மராட்டிய மாநிலச் சட்டமான திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் தடுப்புச் சட்டத்தின் கீழ்' குற்றவாளிகள் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்டு குற்றங்களைச் செய்யும் கும்பல்களுடன் இந்த மூன்று வீரர்களுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

"பின்னடைவு"

Image caption குற்றச்சாட்டுகள் எழுந்த போது கடும் எதிர்ப்புகள் வெளியாயின

நீதிதியின் பிணை உத்தரவும், கண்டனங்களும் வழக்கை விசாரித்து வரும் டில்லி காவல்துறையினருக்கு ஒரு பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.

இந்த மூன்று விரர்கள் தவிர ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகளீன் கீழ் கைது செய்யப்பட்ட 14 புக்கிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தாவூத் இப்ராஹிம் மற்றும் சோட்டா ஷகீல் போன்றவர்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் இருந்தன என்று கூறி மராட்டிய மாநிலச் சட்டத்தை பயன்படுத்தியதற்கு போதிய காரணங்கள் மற்றும் நீதிமன்றத்துக்கு திருப்தியை ஏற்படும் வகையிலான ஆவணங்களையும் காவல்துறையினர் சமர்பிக்கவில்லை என்றும் நீதிபதி தமது உத்தரவில் சுட்டிகாட்டியுள்ளார்.

பிணை வழங்கப்பட்டுள்ள அனைவரும் தமது கடவுச் சீட்டுகளை நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவுக்குள் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விந்து தாரா சிங் ஆகியோர் ஏற்கனவே பிணையில் வெளிவந்துள்ளனர்.