கிரிக்கெட் முறைகேடுகளை விசாரிக்க புதிய குழு அமைக்க யோசனை

கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன்
Image caption கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன்

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முட்கல் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அந்த விசாரணைக் குழுவுக்கு இரு மூத்த வழக்கறிஞர்கள் பெயர்களையும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஐ பி எல் போட்டித் தொடரின் போது பல போட்டிகளின் சில குறிப்பிட்ட பகுதிகள் முன்நிர்ணயம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் உள்ளிட்ட வீரர்களும் சென்னை அணியின் கௌரவச் செயலராக இருந்த பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மகருமன் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து காவல்துறை தனது விசாரணைகளை தொடர்ந்து நடத்திவருகிறது. அதே நேரம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கிரிக்கெட் வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவும் சூதாட்டம் நடக்கவில்லை என்று அறிக்கை வழங்கியது. இதற்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் வாரியம் அமைத்த விசாரணைக் குழு சட்ட விரோதமானது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டு

இதற்கு எதிராக கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த மனு மீது இன்று விசாரண நடைபெற்றபோது, பாஜக வின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தான் தயார் என்று கிரிக்கெட் வாரியம் கூறியது. ஆனால் இதை ஏற்காத நீதிமன்றம் புதிதாக ஒரு குழுவை அமைக்க யோசனை கொடுத்தது. மேலும் மும்பை காவல்துறை இது தொடர்பாக நடத்திவரும் விசாரணைகள் தொடரும் என்றும் இந்தக் குழு தனியாக இது குறித்து விசாரித்த உச்சநீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க ஐ பி எல் இருபது இருபது போட்டிகளை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த அதன் முதல் ஆணையர் லலித் மோடி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் வாரியத்தில் தற்போது இருக்கும் நிர்வாகிகளுக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.