திலகரட்ன டில்ஷான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

திலகரட்ன டில்ஷான்
Image caption திலகரட்ன டில்ஷான், 1999-ம் ஆண்டில் சிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்

இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரட்ன டில்ஷான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.

36 வயதான டில்ஷான் 87 டெஸ்ட் போட்டிகளில் 5,492 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவற்றில் 16 டெஸ்ட் சதங்களும் அடங்கும்.

லோர்ட்ஸ் மைதானத்தில் 2011-இல் இங்கிலாந்து அணிக்கெதிராக குவித்த 193 ஓட்டங்கள் அவரது ஆகக்கூடிய டெஸ்ட் ஓட்டங்கள்.

'எனது இடத்திற்கு இன்னொரு இளைஞரை கொண்டுவந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை ஊக்கப்படுத்துவதற்காக நான் இந்த முடிவை எடுத்தேன்' என்றார் டில்ஷான்.

'சிம்பாப்வே டெஸ்ட் தொடருக்குப் பின்னரே எனது ஓய்வை அறிவிக்கவிருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.

1999-ம் ஆண்டில் சிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த திலகரட்ன டில்ஷான், நாளை வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

டில்ஷான் சர்வதேச 50-ஓவர் ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவார்.

'எனது எதிர்காலம் குறித்து தேசிய கிரிக்கெட் தெரிவாளர்களுடன் பேசுவேன். அவர்களுக்கு நான் தேவைப்பட்டால் 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை விளையாடுவேன்' என்றும் டில்ஷான் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.