விடைபெறுகிறார் சச்சின்

சச்சின் டெண்டூல்கர்
Image caption சச்சின் டெண்டூல்கர்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார்.

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்கவே கடினமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது 17 ஆவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய சச்சின் ஒரு சில ஆண்டுகளிலேயே உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இடம்பிடித்தார்.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களையும் அதிக சதங்களையும் எடுத்த சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகளை செய்துள்ளார்.

பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் சச்சின் சில ஆண்டுகள் இந்திய அணியின் தலைவராகவும் இருந்தார்.

கிரிக்கெட் சாதனைகளுடன் மைதானத்துக்குள்ளும், வெளியிலும் அவர் காட்டிய கண்ணியத்துக்காகவும் அவர் வெகுவாக மதிக்கப்படுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய நாடாளுமன்றத்தின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.