உலக செஸ் போட்டி: முதல் போட்டி சமநிலையில் முடிந்தது

Image caption ஆனந்த் 2007 முதல் 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்

சென்னையில் தொடங்கியுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியில், இன்று சனிக்கிழமை நடந்த முதலாவது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது. மிகுந்த விறுவிறுப்புடன் நடந்த இன்றைய ஆட்டத்தை பெருமளவிலான ரசிகர்கள் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்துள்ளனர்.

இரண்டாவது ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. முதலாவது ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் அடுத்து நடக்கவுள்ள 11 ஆட்டங்களும் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

பல ஆண்டுகளாக மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட உலக செஸ் போட்டியில் நடப்புச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தனது செஸ் கிரீடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது ஆட்டத்தை இன்று தொடங்கினார்.

43 வயதான விஸ்வநாதன் ஆனந்த் 2007-ம் ஆண்டிலிருந்து ஐந்து உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

இம்முறை தனது சொந்த மண்ணான சென்னையிலேயே போட்டி என்பதால் அவருக்கு களச்சூழல் சாதகமாக இருப்பதாக கருதப்படுகிறது.

Image caption மேக்னஸ் கார்ல்ஸென் சிறுவயது முதலே அபாரத் திறமைகளை வெளிப்படுத்தி உலகின் முதல்தரத்தில் இருந்துவருகிறார்

எனினும் செஸ் உலகின் முதல்தரப் பட்டியலில் இருக்கின்ற மேக்னஸ் கார்ல்ஸென் ஆனந்தை எதிர்த்து வெற்றிபெறுவார் என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்ஸெனுக்கு 22 வயதாகிறது.

சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் அபாரத் திறமைகளை வெளிப்படுத்திவருவதால் மேக்னஸ் கார்ல்ஸென் 'மொஸார்ட் ஆஃப் செஸ்' ("Mozart of Chess") என்று அழைக்கப்படுகிறார்.

3 வாரங்கள் 12 போட்டிகளாக இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.