உலகச் சதுரங்கப் போட்டி: 2 ஆவது ஆட்டமும் சமநிலை

உலக சதுரங்கப் பட்டயப் போட்டியின் இரண்டாவது ஆட்டமும் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

Image caption ஆனந்த கார்ல்சன் இடையேயான உலகப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோரிடையே சென்னையில் நடைபெற்றுவரும் உலகச் சதுரங்கப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் இன்று இடம்பெற்றது.

இதில் முதல் நகர்வை வெள்ளைக்காயை வைத்து விளையாடிய ஆனந்த் செய்தார். அடுத்து மேக்னஸ் கார்ல்சன் அதிரடியாக முன்னெடுத்த நகர்வு ஆனந்தை சற்று அதிர வைத்தது என்று சதுரங்க விளையாட்டு விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இன்றைய போட்டியில் 25 நகர்வுகளுக்கு பிறகு இருவரும் வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.

இன்றைய போட்டியில் 25 நகர்வுகளுக்கு கார்ல்ஸன் 25 நிமிடங்களே எடுத்துக் கொண்டார், ஆனால் அதே அளவுக்கான நகர்வுகளுக்கு ஆனந்துக்கு 42 நிமிடங்கள் எடுத்தது.

இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இருவரும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுள்ளனர்

12 போட்டிகளைக் கொண்ட இந்த உலகப் போட்டியில் இன்னும் பத்து ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

அடுத்த போட்டி இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுளது.

போட்டி விதிகளின்படி இரண்டு போட்டிகளுக்கு பின்னர் அந்த இருவருக்கும் ஒருநாள் ஓய்வு அளிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை சுமார் 14 கோடி ரூபாய்கள்.