ஊக்கமருந்து பாவனையைத் தடுக்க புதிய சட்டவிதிகள்

Image caption விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதாக பிடிபட்டால் 4 ஆண்டுகாலம் கட்டாயத் தடை

விளையாட்டுப் போட்டிகளின் போது ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தும் ஏமாற்றுவேலைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டவிதிகள் தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பர்க் நகரில் இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுப் போட்டிகளின்போது விளையாட்டு வீரர்கள் தங்களின் செயற்பாட்டை வேகப்படுத்துவதற்காக ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 4 ஆண்டுகாலம் கட்டாயத் தடைவிதிக்கப்படும்.

அவ்வாறான விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தடைவிதிக்கப்பட வேண்டும் என்று விளையாட்டுத்துறை நிர்வாகிகள் கோரிவருகின்றனர்.

ஆனால், அப்படியான நடவடிக்கையை முன்னெடுத்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படலாம் என்று ஊக்கமருந்து பாவனையை தடுப்பதற்கான உலகளாவிய அமைப்புக்கு(WADA) மனித உரிமைகள் துறையைச் சேர்ந்த மூத்த நீதிபதி ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஊக்கமருந்து பாவனையைத் தடுப்பதற்கான உறுதியான கட்டமைப்புகள் குறைவாக காணப்படுகின்ற நாடுகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கு WADA அமைப்புக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது WADA அமைப்பின் தலைவராக இருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோன் ஃபாகி- இன் இடத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவராக இருக்கும் கிரேய்க் ரீடி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.