கால்பந்து உலகக் கோப்பை-பணிகள் தாமதமாகின்றன

Image caption பிரேசில் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான சின்னம்.

அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் பெரும் சவால்களை சந்திப்பதாக ஃபிஃபாவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்யும் குழுவில் அங்கம் வகிப்பவருமான டேனி ஜோர்டான் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

பிரேசிலில் போட்டிகளுக்கான விளையாட்டரங்குகளின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் நாள் முழுவதும் வேலை செய்ய கேட்டுக் கொள்ளப்படக் கூடிய தேவை வரலாமென ஜோர்டான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் உலகப் போட்டி நடைபெற்றபோது, கட்டுமானப் பணிகள் பின்தங்கியிருந்த நிலையில், 24 மணி நேரமும் வேலை செய்து பணிகளை முடிக்கும் நிலை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகப் கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க ஆட்டம் நடைபெறவுள்ள சாவ் பாலோ நகரில் கட்டப்பட்டுவரும் விளையாட்டு அரங்கமும் இன்னும் தயார் நிலையில் இல்லை.

பிரேசில் போட்டிகளுக்காக புதிதாக கட்டப்படுகின்ற 12 புதிய விளையாட்டு அரங்குகளில், சாவ் பாலோ உட்பட ஆறு இன்னும் தயார் நிலையில் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டு அரங்குகளை கட்டுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, கட்டுமானச் செலவுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

இதன் காரணமாக போட்டிகள் நடைபெறும்போது மேலும் போராட்டங்கள் நடைபெறுவதற்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.