ஏலம் போனது அரிய ஒலிம்பிக் பதக்கம்

Image caption ஏலத்தில் போன பதக்கம்.

மிகவும் சர்ச்சைக்குரிய பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வென்ற ஒரு தங்கப் பதக்கம் சுமார் ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

1936 ஆம் ஆண்டு, ஜெர்மனி, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கறுப்பின அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.

Image caption சாதனையாளர் ஜெஸ்ஸி ஓவன்ஸ்

அந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் ஆடவருக்கான 100,200 மீட்டர் ஓட்டங்களில் மட்டுமல்லாமல், 400 மீட்டர் தொடரோட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

அந்தப் பிரிவுகளில் ஜெர்மன் வீரர்கள் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது.

ஒரு தனி மனிதராக, ஆரிய மேலாதிக்கதை அவர் தகர்த்தெறிந்தது ஹிட்லரை பெரிதும் கோபாவேசத்துக்கு உள்ளாக்கியது.

தனிப்பெரும் சாதனை

பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு முன்னர், வேறு எவரும் அப்படியொரு சாதனையை படைத்தது இல்லை. அவ்வகையில் அந்தச் சாதனை 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் கார்ல் லீவிஸ் சமன் செய்யும் வரை தனிப்பெரும் ஒரு சாதனையாக திகழ்ந்தது.

Image caption பெர்லினில் அளிக்கப்பட்ட தங்கப் பதக்கங்கள்

இணையதளத்தின் மூலம் விறபனையான இந்தப் பதக்கம் மட்டுமே அவர் பெற்ற நான்கில் இப்போது இருக்கும் ஒன்றே ஒன்று. எனினும் இப்போது விற்பனையாகியுள்ள அந்தப் பதக்கம் அவர் எந்தப் போட்டியில் வென்றது என்பது தெரியவில்லை.

நிலக்குத்தகைதாரரின் மகனும், ஒரு அடிமையின் பேரனுமான அவர் 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு நாடு திரும்பிய பிறகும், நிறவெறிக் கொள்கை காரணமாக புறக்கணிக்கப்படுவதும், வேலைக்காக சிரமப்படும் நிலையும் ஏற்பட்டது.

அந்த ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று நாடு திரும்பினாலும், அடுத்த மூன்றாண்டுகளில் திவாலாகிவிட்டதாக அவர் அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது அவரை ஆதரித்த தனது நெருங்கிய நண்பரும் நடனக் கலைஞருமான பில் போஜாங்கில்ஸ் ராபின்சனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்.

அந்தப் பதக்கமே இப்போது கலிஃபோர்னியாவில் ஏலம் போயுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான ஒரு நினைவுப் பொருள் இந்த அளவுக்கு அதிக தொகைக்கு இதுவரை ஏலத்தில் சென்றதில்லை.

இந்தச் செய்தி குறித்து மேலும்