ஆஷஸ் தொடரை இழந்தது இங்கிலாந்து அணி

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மிக முக்கியமான போட்டி என்று கருத்தப்படும் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

Image caption ஆஸ்திரேலியா தொடரை வென்ற தருணம்.

பெர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம், அந்த அணியிடமிருந்து ஆஷஸ் பட்டத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 381 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அடிலெய்டில் 218 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இன்று(செவ்வாடய்) அதிகாலை லண்டன் நேரம் சுமார் 6 மணி அளவில் முடிவடைந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய அணித் தலைவர் அலிஸ்ட்டர் குக் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது.

தமது அணிக்காக பி ஏ ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 120 ஓட்டங்களைப் பெற்றாலும், இங்கிலாந்து அணியால் தோல்வியை தடுக்க இயலவில்லை.

இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை என்றும், அதுவே ஆஷஸ் தொடரை இழக்க முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்றும் பல முன்னாள் பிரபலங்கள் கூறியுள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில், ஆஸ்திரேலிய அணியை 3-0 எனும் கணக்கில் வென்று ஆஷஸ் தொடரை தக்க வைத்துக் கொண்டது.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 26 ஆம் தேதி மெல்பர்ண் நகரில் தொடங்கவுள்ளது.

கடைசி டெஸ்ட் சிட்னி நகரில் இடம்பெறுகிறது.