கிரிக்கெட் வீரர் ஸ்வான் 'திடீர் ஓய்வு'

Image caption கிரேம் ஸ்வான்

உலகின் ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் கிரேம் ஸ்வான் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகள் மற்றும் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக ஸ்வான் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஸ்வானின் இந்த அறிவிப்பு பல்தரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஆஷஸ் பட்டத்தையும் இழந்துள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன.

பங்களிப்பு

Image caption டி-20 வெற்றிக் களிப்பில் ஸ்வான்

ஸ்வான் இதுவரை விளையாடியுள்ள 60 டெஸ்ட் போட்டிகளில் 255 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர்கள் எடுத்துள்ள விக்கெட்டுகளின் அடிப்படையில் ஸ்வான் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, 20 ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு ஸ்வானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அதேபோல இங்கிலாந்து அணியை டெஸ்ட் தரப்பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டு செல்வதிலும் கிரேம் ஸ்வான் முக்கிய பங்காற்றியிருந்தார்.