கறுப்பின விளையாட்டு வீரர்களின் முன்னோடி ஜாக் ஜான்சன்

உலகளவில் கறுப்பின மக்களுக்கு விளையாட்டுத் துறையில் ஒரு பெரிய ஏற்றத்தையும் கௌரவத்தையும் பெற்றுத்தந்த ஜாக் ஜான்ஸன் நிறவெறிக் கொள்கை காரணமாக ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன.

Image caption ஜாக் ஜாக்சன்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜாக் ஜான்சன் 1908 ஆம் ஆண்டு உலகளவில் ஹெவி வெயிட் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கறுப்பினத்தவர் என்கிற பெருமையை பெற்றார்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1913 ஆண்டு, அந்தக் காலகட்டத்தில் நிறவெறிக் கொள்கை காரணமாக, வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்து வந்தபோது, ஜாக் ஜான்சன் ஒரு வெள்ளையினப் பெண்ணுடன் எல்லையக் கடந்து சென்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒருதலைப்பட்ச தண்டனை

Image caption மனைவி லூசீலுடன் ஜான்சன்

வெள்ளையின மக்கள் மட்டுமே ஜூரிகளாக இருந்த அந்த வழக்கு விசாரணையில், அவர் தார்மீகமில்லாத வழிகளுக்காக வெள்ளையினப் பெண் ஒருவருடன் அவர்கள் வாழும் பகுதிக்கு சென்றார் என்று கூறி, அவருக்கு ஓரண்டும் ஒரு நாளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடைபெற்று நூறாண்டுகளாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் சம உரிமைகள் பெற்று, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

சிறு வயது முதலே குத்துச் சண்டையில் ஆர்வம் கொண்டிருந்த ஜாக் ஜான்சன் தனது இருபதாவது வயதிலேயே தொழில்முறை குத்துச் சண்டை வீரராக மாறினார்.

ஆனாலும் நிறவெறிக் கொள்கை காரணமாக, உலக ஹெவி வெயிட் பட்டத்துக்கான போட்டியில் பங்குபெற அவர் பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அந்தப் போட்டியை நிறவெறிக் கொள்கை காரணமாக சிட்னியில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த கனடாவின் டாமி பர்ண்ஸை அவர் எதிர்கொண்டார்.

1908 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில், அவர் பர்ண்சை துவம்சம் செய்துவிட்டார். காவல்துறையினர் வந்து போட்டியை தடுத்து நிறுத்தும் அளவுக்கு ஜாக்சன் வெள்ளையினத்தவரான பர்ண்ஸை தனது குத்துக்களால் வீழ்த்தியிருந்தார்.

'மாயை தகர்ந்தது'

Image caption கார் ஓட்டுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் ஜான்சன்.

கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் தரம் குறைந்தவர்கள் என்று வெள்ளையின மக்களால் ஏற்படுத்தப்பட்டிந்த மாயையை இந்த வெற்றி தகர்த்தெரிந்தது.

பின்னாளில் முகமது அலி உட்பட பல கறுப்பின மக்கள் குத்துச் சண்டை விளையாட்டில் ஈடுபடுவதற்கு ஜாக் ஜான்சன் பெரிய உந்து சக்தியாக இருந்தார்.

1946 ஆம் ஆண்டு ஒரு வாகன விபத்தில் அவர் காலமானாலும், அவர் விட்டுச் சென்ற பாரம்பரியம் இன்றும் உலகளவில் ஆளுமை செலுத்துகிறது