'கறுஞ்சிறுத்தைக்கு' கால்பந்து உலகம் அஞ்சலி

'கறுஞ்சிறுத்தை' என்று கால்பந்து உலகத்தில் அறியப்பட்ட ஏவோசேபியோவின் மரணத்தை முன்னிட்டு போர்ச்சுகல் நாட்டு அரசு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவித்துள்ளது.

Image caption ஆடுகளத்தில் ஏவோசேபியோவை ஆளுமை அசைக்கமுடியாத அளவுக்கு இருந்தது.

அவரது நல்லடக்கம் இன்று லிஸ்பன் நகரில், மதப் பிரார்த்தனைகளுக்கு பிறகு நடந்தது.

கால்பந்து வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அறியப்பட்ட ஏவோசேபியோ ட சில்வா ஃபெஹேரா உடல் நல்லடக்கம் செய்ப்படுவதற்கு முன்பாக அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தும் முகமாக லிஸ்பன் நகரின் லூஸ் விளையாட்டரங்கில் வைக்கப்பட்டது.

அவர் தனது 71 ஆவது வயதில் மாரடைப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அவரது இழப்பு கால்பந்து உலகில் ஈடுசெய்ய முடியாத ஒன்று என ஃபிஃபா அமைப்பின் தலைவர் செப் பிளெட்டர் டிவிட்டரில் கூறியுள்ளார்.

ஆப்ரிக்க நாடான மொசாம்பிக், போர்ச்சுகலின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில், அவர் போர்ச்சுகல் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுபவர் என்று அவர் வெகுவாக புகழப்பட்டார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் 10,000 டாலர்கள்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் பத்தாயிரம் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து தமது அணிக்காக விளையாட ஃபென்ஃபிகா அணி அவரை ஒப்பந்தம் செய்தது.

போர்ச்சுகல் அணிக்காக 64 போட்டிகளில் விளையாடிய அவர் அந்நாட்டுக்காக 41 கோல்களை அடித்துள்ளார்.

Image caption லூஸ் விளையாட்டு அரங்குக்கு முன்னால் உள்ள அவரது சிலைக்கு ரசிகர்கள் அஞ்சலி

1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மிக அதிக அளவில் கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் ஏவோசேபியோ.

இன்றளவும் காலபந்து விளையாட்டில் மிகப் பிரபலமான வீரர்களில் அவரும் ஒருவர் என்று பரந்துபட்ட அளவில் கருதப்படுகிறது.

தனது கால்பந்து வாழ்க்கையில் தொழில்முறை ரீதியில் அவர் விளையாடிய 745 போட்டிகளில் அவர் 733 கோல்களை அடித்துள்ளார்.

போட்டிகளின் போது கால்பந்தை வேகமாக உதைத்து எடுத்துச் செல்வதைவிட அதை உருட்டிச் செல்வதில் ஏவோசேபியா தனித்துவம் பெற்றிருந்தார் என்று கால்பந்து விமர்சகர்கள் கூறுகிறார்கள்.