ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸி ஓபன் டென்னிஸ்: ரமேஷ் கிருஷ்ணன் ஆய்வு

படத்தின் காப்புரிமை aussieopen
Image caption ஆஸி ஓபன் டென்னிஸ் கோப்பையுடன் வாவ்ரின்கா

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் தோல்வியடைந்தது ஆச்சரியமான ஒரு விஷயம் என்கிறார் இந்திய டென்னிஸ் அணியின் முன்னாள் தலைவர் ரமேஷ் கிருஷ்ணன்.

ஞாயிறன்று முடிவடைந்த ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்விஸ்ஸின் வாவ்ரின்கா நடாலை 6-3, 6-2, 3-6, 6-3 எனும் செட் கணக்கில் வென்று தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

அரையிறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரை வென்ற நடால் இறுதிப் போட்டியில் வாவ்ரின்காவிடம் தோல்வியடைந்தது ஆச்சரியம் அளித்தாளும், அண்மைக் காலமாக வாவ்ரின்கா சர்வதேச அளவில் தனது ஆளுமையை அதிகரித்து வருவதும் கவனிக்கத்தக்கது என்று ரமேஷ் கிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காயங்கள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடும் காயங்களுடன் ஆடினார் ரஃபேல் நடால். முதுகு வலியாலும் அவதி.

அண்மையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை வாவ்ரின்கா வென்றிருந்தாலும், ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அவர் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை என்றும் ரமேஷ் கிருஷ்ணன் கூறினார்.

எனினும் கடந்த ஆண்டு உடல் நலக் குறைபாடுகள் காரணமாக பல போட்டிகளில் ஆடாமல், பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து ஆண்டின் இறுதிப் பகுதியில் சில போட்டிகளில் வென்ற நடால் உலக ஆடவர் தரப்பட்டியலின் முதலிடத்தை மீண்டும் பெற்றார்.

அப்படியான சூழலில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம்வரை வந்து அதில் தோல்வியடைந்தது நடாலுக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் எனவும் ரமேஷ் கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் கடுமையான காயங்களுடனேயே நடால் விளையடினார்.

அதேவேளை ரோஜர் ஃபெடரரின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று கருத முடியாது என்றும் ரமேஷ் கிருஷ்ணன் கூறுகிறார்.