சர்வதேச கிரிக்கெட் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தம்; ஸ்ரீநிவாஸன் தலைவராகத் தேர்வு

சிங்கப்பூரில் கூட்டம் முடிந்த பின்னர் ஸ்ரீநிவாஸன் செய்தியாளர்களிடம் பேசுகிறார் படத்தின் காப்புரிமை AFP
Image caption சிங்கப்பூரில் கூட்டம் முடிந்த பின்னர் ஸ்ரீநிவாஸன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசி தம்முடைய நிர்வாக கட்டமைப்புக்குள் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர தீர்மானித்துள்ளது.

சிங்கப்பூரில் நடந்த ஐசிசியின் செயற்குழு கூட்டத்தில், சீர்திருத்தத்துக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஐசிசி-யில் நிரந்தர உறுப்புரிமை கொண்ட பத்து நாடுகளில் இலங்கையும் பாகிஸ்தானும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், மற்ற எட்டு நாடுகளின் ஆதரவுடன் சீர்திருத்த தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம்

இந்த சீர்திருத்தங்களின் மூலமாக உலக கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து ஏற்படுத்தப்படுகிறது என்று கூறி பாகிஸ்தானும், இலங்கையும் தீர்மானங்களை எதிர்த்துவந்திருந்தன.

தென்னாப்பிரிக்காவும் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தாலும் கடைசியில் அது இத்தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி-க்குள் புதிய செயற்குழு ஒன்றையும் நிதி மற்றும் வர்த்தக விவகார குழு ஒன்றையும் ஏற்படுத்தி கள அளவில் நிர்வாக தலைமைத்துவத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குழுக்களில் ஐந்து நாடுகள் பங்குபெறும். அவற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பு நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் என்று தெரிகிறது. மற்ற இரண்டு நாடுகள் ஐசிசி நிர்வாகக் குழுவால் தேர்ந்தெடுவார்கள்.

ஸ்ரீநிவாஸன் இடைக்காலத் தலைவர்

இவ்வாண்டின் நடுப்பகுதி முதல் ஒரு இரண்டு வருட காலத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பான பிசிசிஐயின் தலைவர் என்.ஸ்ரீநிவாஸன் ஐசிசி நிர்வாகக் கட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக இருப்பார் என்று தற்போதைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடம் நிறைவுறும் நேரத்தில் ஐசிசி நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஐசிசியின் பத்து முழு உறுப்புநாடுகளில் எந்த ஒரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாக தலைவரும் ஐசிசி-நின் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஊக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்கென விசேட நிதி ஒன்றை உருவாக்குவது. டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களிடையே ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு அடுத்த பத்து ஆண்டுகளுக்கான டெஸ்ட் பந்தயங்களின் ஒருங்கிணைந்த அட்டவணை ஒன்றை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டும் 2021ஆம் ஆண்டும் நடத்தப்படுவதாய் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பதிலாக அவ்வாண்டுகளில் சாம்பியன்ஸ் டிராஃபி பந்தயங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாடுகளை வைத்து இறுதிச் சுற்று போட்டிகளை நடத்துவதென்பது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பொருத்தமாக இல்லை என்பதால் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசியில் தற்காலிக உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்தைப் பெறுவதற்கான வழி ஒன்றும் தற்போது வகுக்கப்பட்டுள்ளது.