ஐபிஎல்: கெவின் பீட்டர்சன் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்

  • 12 பிப்ரவரி 2014
படத்தின் காப்புரிமை Getty
Image caption இங்கிலாந்து அணியில் இடம் இல்லை, ஆனால் ஐபிஎல்லில் நல்ல தொகைக்கு ஏலம் - கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், வரும் ஐபிஎல் போட்டிகளில் ஆட, டில்லி டேர்டெவில்ஸ் அணியால் 9 கோடி ரூபாய்க்கு ( 1.5 மிலியன் அமெரிக்க டாலர்கள்) ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த வாரம்தான் அவர் ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து விளையாடி, 5-0 என்ற கணக்கில் தோற்ற ஆஷஸ் போட்டித் தொடரை அடுத்து இங்கிலாந்து அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருந்தார்.

அவர் இப்போது எதிர்வரும் ஏழாவது ஐபிஎல் போட்டிகள் எல்லாவற்றிலும் டில்லி டேர் டெவில்ஸ் அணிக்காக ஆடுவார்.

இந்தியாவின் யுவ்ராஜ் சிங் பெங்களுர் ஐபிஎல் அணியான, ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் இதை விட அதிகத் தொகைக்கு, 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் நடந்து வரும் இந்த சுற்று ஐபிஎல் ஏலங்களில் மொத்தம் 514 கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஏலத்தில் விடப்படுகிறார்கள்.

இம்முறை ஏலம் இந்திய ரூபாயில்

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் 60 கோடி ரூபாய் வரை ஏலத்தில் செலவிடலாம் என்ற வரம்பு இருக்கிறது.

இந்த ஆண்டு அமெரிக்க டாலர்களில் அல்லாமல், இந்திய ரூபாய்களிலேயே ஏலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை நடந்த இந்த முதல் சுற்று ஏலங்களில் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட மற்ற கிரிக்கெட் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் மிட்ச்செல் ஜான்சன் ( 6.5 கோடி ரூபாய், பஞ்சாப் கிங்ஸ் அணி) மற்றும் டேவிட் வார்னர் ( 5.5. கோடி ரூபாய், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி), தென்னாப்ரிக்காவின் ஜாக் காலிஸ் ( 5.5 கோடி ரூபாய், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி), இந்தியாவின் வீரேந்தர் சேவாக் ( 3.2 கோடி ரூபாய் , பஞ்சாப் கிங்ஸ் அணி) , ஆகியோர் அடங்குவர்.

கடந்த ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் ஏலங்களில் மிக அதிக தொகைக்கு ஏலம் போனவர் இந்தியாவின் கௌதம் கம்பீர். 2011ல் நடந்த ஏலத்தில் அவர் 2.4 மிலியன் டாலர்களுக்கு ஏலம் போனார்.

ஆனால் ஏலத்தொகை ஏறக்குறைய மும்மடங்காகி விட்டாலும், ஐபிஎல் கிளப்புகளின் வருவாயில் லாபம் அதே அளவு அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் போட்டியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளும், போட்டிகளின் நற்பெயரைப் பாதித்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி மே மாதம் 30ம் தேதி வரை நடக்கின்றன.