ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐசிசி கொடுப்பனவில் பங்கு கேட்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

படத்தின் காப்புரிமை httpwww.srilankacricket.lk
Image caption தற்போது ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை அணியினருக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பள ஒப்பந்தத்துக்கு அணி வீரர்கள் பதில் அளிக்கவில்லை

தற்போது வங்கதேசத்தில் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிவரும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், இலங்கை கிரிக்கெட் சபையுடனான புதிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் கிரிக்கெட் வீரர்களின் நிழற்படங்களைப் பயன்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் சபைக்கு கொடுக்கப்படும் கொடுப்பனவில் 20 வீதத்தை தமக்கு வழங்க வேண்டும் என்றுகோரியே இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தை ஏற்க இன்னும் முன்வரவில்லை.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுவரை ஐசிசி- இடமிருந்து கிடைத்துவந்த பணத்தில் 25 வீதத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வழங்கிவந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு முதல் அந்தக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

இதனால், இம்முறை சம்பள ஒப்பந்தத்தில் ஐசிசி- இன் கொடுப்பனவுகளில் 20 வீதம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை வீரர்கள் கோரிவந்துள்ளனர்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்காக 3 விளையாட்டரங்குகளை அமைத்த செலவுகளுக்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம், சுமார் 2 பில்லியன் ரூபா கடன் சுமையில் திணறுவதாக இலங்கையின் டெய்லிமிரர் ஊடக வலையமைப்பின் விளையாட்டுத் துறைச் செய்தியாளர் சன்னக்க டி சில்வா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை srilankacricket.lk
Image caption இலங்கையின் முதற்தர வீரர்கள் ஐந்து பேர் தலா 55 மில்லியன் ரூபா ஆண்டுக்கு சம்பாதிக்கின்றனர்: கிரிக்கெட் நிர்வாகம்

எனினும் வங்கதேசத்துக்கு புறப்பட முன்னதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தலைமைத் தெரிவாளர் சனத் ஜயசூரியவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக ஐசிசி கொடுப்பனவு விவகாரம் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அணி வீரர்கள் இருந்துள்ளனர்.

எனினும் அந்தக் கொடுப்பனவுகள் பற்றிய குறிப்புகள் இன்றியே இம்முறை புதிய சம்பள ஒப்பந்தம் வீரர்களின் சம்மதத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால், அதனை ஏற்க இலங்கை அணி வீரர்கள் மறுத்துவருவதாகவும் சன்னக்க டி சில்வா தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர்களின் படங்களை பயன்படுத்துவதற்காக கிரிக்கெட் நிர்வாக சபைகளுக்கு ஐசிசி வழங்கும் பணத்தில் ஒரு பங்கை அணி வீரர்களுக்கு வழங்கும் வழக்கம் வேறெந்த நாடுகளிலும் இல்லை என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கூறியதாகவும் டெய்லிமிரர் செய்தியாளர் கூறினார்.

'இலங்கையில் முன்னணி தரத்திலான ஐந்து வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒப்பந்த சம்பளம் மற்றும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான கொடுப்பனவுகள் எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒருவருக்கு இலங்கைப் பணத்தில் 55 மில்லியன் ரூபா பணம் ஆண்டுக்கு கிடைக்கிறது' என்று கிரிக்கெட் சபையின் செயலாளரை மேற்கோள் காட்டி சன்னக்க டி சில்வா கூறினார்.

இம்முறை இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு 7 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் கூறுகிறது.