கிரிக்கெட் ஊழல்: ஸ்ரீநிவாசன் மனு நிராகரிப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption வாரியத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட என் ஸ்ரீநிவாசன்

இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட என் ஸ்ரீநிவாசனுக்கு எந்தவிதமான நிவாரணமும் அளிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து, அது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி முட்கல் தலைமையிலான குழு அண்மையில் தனது அறிக்கையை சமர்பித்தது.

ஐபிஎல் முறைகேடுகள் குறித்த அந்த விசாரணை அறிக்கை வெளிப்படையாக சமர்பிப்பக்கப்பட்டிருந்தாலும், சில விபரங்களை மூடிய உறையிலிட்டு உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டிருந்தது.

கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து தன்னை உச்சநீதிமன்றம் நீக்கியது குறித்து ஸ்ரீநிவாசன் கேள்வி எழுப்பி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை தொடர்ந்து நடைபெற்றது.

மூடிய உறை திரப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இதன்போது முட்கல் குழு அளித்த மூடிய உறையை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்தனர். அதில் ஸ்ரீநிவாசன் உட்பட 13 பேரின் பெயர்கள் இருந்தன. அவர்கள் குறித்தும் விசாரணைகள் நடைபெற வேண்டும் என அந்தக் குழு கூறியிருந்தது.

மூடிய உறையில் இருந்த பட்டியலில் ஸ்ரீநிவாசன் பெயரும் இருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அவருக்கு எந்தவிதமான நிவாரணமும் அளிக்க இப்போது முகாந்திரம் இல்லை எனத் தெரிவித்துவிட்டனர்.

இதேவேளை, ஐபிஎல் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து இந்தியக் கிரிக்கெட் வாரியமே ஒரு சுயாதீனமானக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் இந்திய உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஆனால் அந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று கருதப்பட்டால் நீதிமன்றம் தமது கண்களை மூடிக் கொண்டு இருக்காது எனவும் நீதிபதிகள் தெரிவித்ததாக வழக்கு நடைபெறும்போது நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் ஆதிமூலம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.