ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக லலித் மோடி தேர்வு

படத்தின் காப்புரிமை AP
Image caption சர்ச்சைக்குரிய ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி

முன்னாள் இந்தியன் பிரீமியர் லீக் ஆணையர் லலித் மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது, ஆனால் அந்த முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க வெளியிடப்படாமல் ஒரு சீல் வைத்த உறையில் வைக்கப்பட்டிருந்தது.

தீவிர ஆலோசனைகளுக்கு பிறகு, இன்று செவ்வாய்க்கிழமை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உச்ச நீதிமன்றம் நியமித்த ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியால் இந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 33 வாக்குகளில் 24 வாக்குகளை பெற்று லலித் மோடி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராக இந்த தேர்தலில் போட்டியிட்ட ராம்பால் ஷர்மா என்பவர் வெறும் 5 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பவன் கோயல் என்பவரும் புதிய செயலாளராக சோமேந்தரா திவாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். லலித் மோடியின் வழக்கறிஞர் மெஹ்மூத் எம் அப்தி அந்த சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்று இந்திய கிரிகெட் கட்டுப்பட்டு வாரியத்திருந்து லலித் மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒழுக்கமற்ற மற்றும் தவறான நடவடிக்கைகள் உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுக்களில் லலித் மோடியை குற்றவாளி என்று நிரூபணம் செய்து பிசிசிஐயின் ஒழுங்குமுறை ஆணையம் அவருக்கு பிசிசிஐயிலிருந்து வாழ்நாள் தடை விதித்திருந்தது.

ராஜஸ்தான் கிரிகெட் சங்கத்தின் தலைவர் தேர்தலில் லலித் மோடி களம் இறங்கியுள்ளார் என்ற செய்தி வெளியானவுடன், பிசிசிஐயிலிருந்து தடை விதிக்கப்பட்டவர் இந்த தேர்தலில் பங்கெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ வழக்கு தொடர்ந்தது.

லலித் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்றும், அந்த தேர்தலே ரத்து செய்யப்படவேண்டும் என்றும் பிசிசிஐ கோரியிருந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தலின் முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையிலான அமர்வு அந்த சீல் இடப்பட்ட உறையில் உள்ள முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி என்.எம்.கஸ்லிவாலிடன் ஒப்படைக்க உத்தரவிட்டது. எனினும் அந்த தேர்தலின் முடிவு வெளியிடப்பட்ட பின் அதில் யாருக்காவது பாதிப்பு இருக்குமேயானால் அவர்கள் தகுந்த அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.