ஆண் கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பெண்மணி

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஹெலீனா கோஸ்ட்டா

பிரான்ஸிலுள்ள ஒரு கால்பந்து கிளப் போர்ச்சுகலைச் சேர்ந்த ஒரு பெண்மணியை தமது அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

ஆண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பெண் கால்பந்து பயிற்சி அளிக்க செய்யப்படும் நியமனங்களில் மிக உயர்ந்த மட்டத்திலான ஒரு நியமனமாக இது பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு கால்பந்து லீகில், இரண்டாம் டிவிஷனில் இருக்கும் கிளெர்மாண்ட் அணிக்கு ஹெலினா கோஸ்ட்டா இப்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமது தாய்நாடான போர்ச்சுகலில் அவர் முன்னர் கீழ் மட்டத்திலான ஒரு ஆடவர் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption போட்டியின் போது வீரர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார் கோஸ்ட்டா

அதுமட்டுமல்லாமல் ஹெலினா கோஸ்ட்டா இதற்கு முன்னர் கத்தார் மற்றும் இராக் நாட்டின் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

போர்ச்சுகலின் அலாந்திராப் பகுதியில் 1978 ஆம் ஆண்டு பிறந்த அவர், ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்திடமிருந்து பயிற்றுனருக்கான உயர்தர பட்டத்தைப் பெற்றவர்.

விளையாட்டு அறிவியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ள ஹெலீனா கோஸ்ட்டா பென்ஃபிக்கா இளைஞர் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி போர்ச்சுகலின் தேசியப் பட்டத்தை வென்றது.

க்ளெர்மாண்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்சு லீக் கால்பந்து போட்டிகள் முடிவடைந்த பிறகு, பொறுப்பேற்கவுள்ளார்.

அவரது நியமனத்தை அந்தக் கால்பந்து அணியின் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.