உலகக் கோப்பை கால்பந்து 2014: முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரான்ஸின் தாக்குதலை ஹாண்டூரஸால் சமாளிக்க முடியவில்லை

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு பிரான்ஸ் அணி, ஹாண்டூரஸ் அணியை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு முடிவு காணப்பட்டது.

பிரான்ஸ் அணியின் கரீம் பென்சமா 45 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்து தமது அணியை 1-0 என்று முன்னிலைக்கு எடுத்துச் சென்றார்.

இதனிடையே ஹாண்டூரஸ் வீரர் வில்சன் பிளாசியோ, சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

'கோல் லைன் டெக்னாலஜி'

பின்னர் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, ' கோல் லைன் டெக்னாலஜி' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption தொழில்நுட்பத்தின் மூலம் முடிவு செய்யப்பட்ட கோல் இதுதான்

ஆனால் கோலை யார் கணக்கில் சேர்ப்பது என்று சர்ச்சை எழுந்தது. பின்னர் வீடியோ காட்சிகளை மெதுவாக ஓடவிட்டு, பந்து வெலாட்ரஸின் உடலில் பட்டு கோலுக்குள் சென்றது என்று முடுவு செய்யப்பட்டது.

எனவே ஹாண்டூரஸின் 'சுய கோல்' மூலம் பிரான்ஸ் 2-0 என்று முன்னேறியது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய பிரான்ஸ் அணியினர் 72 ஆவது நிமிடத்தில் கரீம் பென்சமா மீண்டும் ஒரு கோல் அடிக்க வெற்றியை உறுதி செய்து கொண்டது.