கானா கால்பந்து அணி பந்தைய மோசடியில் ஈடுபட்டதா?

படத்தின் காப்புரிமை Getty
Image caption தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கானா மறுக்கிறது.

நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில், தமது தேசிய அணியினர் போட்டிக்கு முன்பே முடிவை நிர்ணயிக்கும் வகையில், விளையாட ஒப்புக் கொண்டனர் எனும் குற்றச்சாட்டை கானாவின் கால்பந்து சங்கம் மறுத்துள்ளது.

பிரிட்டனிலிருந்து வெலியாகும் டெய்லி டெலிகிராஃப் மற்றும் சானல்-4 தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், தம்முடைய அடையாளத்தை வெளிக்காட்டாமல் செய்த புலனாய்வின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் பிபிசியிடம் பேசிய, கானா நாட்டு கால்பந்து சங்கத்தின் தலைவர் க்வேஸி ந்யாந்ன்ட்சீ, எந்தப் போட்டியையும் முறைகேடான வழியில் நிர்ணயிக்க தான் உடன்படவில்லை என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆப்ரிக்காவில் ஒரு பலமான அணியாக கானா உள்ளது.

எனினும் இந்த விஷயம் தொடர்பில், ஒரு வரைவு ஒப்பந்தம் தன்னிடம் அளிக்கப்பட்டது என்றும், ஆனால் அதில் தான் கையொப்பம் இடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகவியலாளர்கள் படம்பிடித்துள்ள காட்சிகளில் இருக்கும் இருவர் குறித்தும் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

அந்தக் காணொளியில் கானா கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரும் ஃபிஃபாவின் ஏஜெண்டு ஒருவரும் காணப்படுகின்றனர்.

ஆனால் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நேர்மை எந்த வகையிலும் கேள்விக்குறியாகவில்லை என்று ஃபிஃபா கூறுகிறது.