உலகக் கோப்பை: அர்ஜெண்டினா, நைஜீரியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption பரபரப்பான ஆட்டத்தில் அர்ஜெண்டினா வெற்றி

பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக் கோபை கால்பந்து போட்டியில் இன்று இடம்பெற்ற முதல் இரண்டு ஆட்டங்களில் அர்ஜெண்டினா அணியும், போஸ்னியா ஹெர்சகோவினா அணியும் வெற்றி பெற்றுள்ளன.

அர்ஜெண்டினா அணி நைஜீரியவை 3-2 எனும் கணக்கில் வென்றது. எனினும் நைஜீரியாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

போஸ்னியா ஹெர்சகோவினா, இரானை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றிருந்தாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

இந்தப் போட்டிகள் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்றன. இந்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை அர்ஜெண்டினாவும், நைஜீரியாவும் பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty
Image caption நைஜீரியாவும் அபார ஆட்டம்

அர்ஜெண்டினா இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றதன் மூலம் 9 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது.

நைஜீரிய அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி ஆகியவற்றுடன் இரானுக்கு எதிரான போட்டி சம நிலையில் முடிந்ததாலும், 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

இரானை வென்றதன் மூலம் 3 புள்ளிகளைப் பெறும் போஸ்னியா ஹெர்சகோவினா மூன்றாம் இடத்திலும், இரான் ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளன.

இதனிடையே உருகுவே நாட்டு வீரர் லூயிஸ் சுவாரஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் ஃபிஃபாவால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.