சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஸ்ரீநிவாசன் நியமனம் உறுதி

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பதவியில் நீடிக்கத் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீநிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகிறார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக , இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சர்ச்சைக்குரிய முன்னாள் தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசனின் நியமனத்தை மெல்போர்னில் கூடிய கவுன்சிலின் முழு அவை இன்று வியாழக்கிழமை உறுதி செய்தது.

ஏற்கனவே ஸ்ரீநிவாசன் இந்தப் பதவிக்காக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் பிரேரிக்கப்பட்டிருந்தார்.

மெல்போர்னில் நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த வருடாந்திர மாநாட்டின் முடிவிற்கு பிறகு ஐசிசி தலைவராக ஸ்ரீநிவாசன் முழு பொறுப்பேற்று கொள்வார்.

ஐசிசி என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு ஸ்ரீநிவாசன் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கம்

2013ஆம் ஆண்டில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தொடர் போட்டிகளின் மீது சட்டவிரோதமான வகையில் பந்தயம் கட்டுதல், முடிவுகளை நிர்ணயிக்கும் வகையில் தில்லுமுல்லுகள் செய்தல் போன்ற முறைகேடுகள் தொடர்பில் நடந்துவரும் விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த பிசிசிஐயின் அப்போதைய தலைவர் ஸ்ரீநிவாசன் தன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது.