அடுத்த சுற்றுக்கு நகர்ந்துள்ளது உலகக் கோப்பை கால்பந்து போட்டி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்பையை வெல்ல கடும் போட்டி நிலவுகிறது

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு நகர்ந்துள்ளன.

32 அணிகள் பங்குபெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பகட்ட ஆட்டங்களில் தோல்வியடைந்து 16 அணிகள் வெளியேறியுள்ளன.

நடப்புச் சாம்பியன் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுகல் உட்பட பல ஐரோப்பிய அணிகளும், கானா, கேமரூன் ஆகிய ஆப்ரிக்க அணிகளும் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption போட்டியை ரசித்து மகிழும் பன்னாட்டுப் பெண்கள்

ஆசியாவிலிருந்து பங்குபெற்ற மூன்று அணிகளான இரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை.

ஆனால் போட்டியை நடத்தும் பிரேசில், உருகுவே, சிலி போன்ற தென் அமெரிக்க நாடுகளும், கொலம்பியா, கோஸ்ட்டாரிக்கா போன்ற மத்திய அமெரிக்க நாடுகளும், வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவும் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை ugc
Image caption ஹுக்கா, தேனீர், தின்பண்டங்களுடன் உலகக் போட்டிகளை ரசிக்கும் அல்ஜீரிய மக்கள்

இவற்றுள் நெதர்லாந்து, கொலம்பியா, அர்ஜெண்டினா, பெல்ஜியம் ஆகிய அணிகள் தாம் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் வென்று ஒன்பது புள்ளிகள் பெற்றுள்ளன.

பிரேசில், மெக்ஸிகோ, கோஸ்ட்டாரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் அணிகள் ஏழு புள்ளிகள் பெற்றுள்ளன.

படத்தின் காப்புரிமை AP
Image caption காலிறுதிக்கு எந்த எட்டு அணிகள் முன்னேறும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு

காலிறுதிக்கு முந்தையச் சுற்றான 16 அணிகள் பங்கு பெறும் கட்டத்தின், முதல் இரு ஆட்டங்கள், பிரேசில்-சிலி மற்றும் கொலம்பியா-உருகுவே அணிகளுக்கு இடையே நாளை(28.6.14) சனிக்கிழமை நடைபெறுகிறது.

பின்னர் தொடர்ச்சியாக அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும்.

இதில் வெற்றி பெரும் அணிகள் காலிறுதிக்குள் நுழையும். அந்த ஆட்டங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் தேதி தொடங்குகின்றன.