சுவாரஸிடம் கடி வாங்கியவர் அவருக்கு ஆதரவு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption லூயிஸ் சுவாரஸ்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள லூயிஸ் சுவாரஸுக்கு ஆதரவாக கடி வாங்கியவர் குரல் கொடுத்துள்ளார்.

எதிரணி வீரரைக் கடித்தார் என்பதற்காக உருகுவே நாட்டின் சுவாரஸுக்கு நான்கு மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், ஒன்பது சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா நேற்று அறிவித்தது.

ஆனால் ஃபிஃபாவின் இந்த தண்டனை மிகவும் கூடுதலானது என்று, அவரிடம் கடிவாங்கிய ஜியார்ஜியோ ச்சீலீனி கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுவாரஸும், ச்சீலீனியும்

இது தவிர, தமது நாட்டின் மிகப்பெரும் கால்பந்து நட்சத்திரமான சுவாரஸை உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து வெளியேற்றியுள்ளது குறித்து உருகுவேயில் கடும் கோபாவேசம் எழுந்துள்ளது.

கால்பந்து விளையாடும் சிறிய நாடுகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்போது வேறு அளவுகோல்கள் கையாளப்படுகின்றன என்று, உருகுவேயின் அதிபர் ஹோசே மொஹீக்கா கூறியுள்ளார்.

இதனிடையே சுவாரஸுக்கு வர்த்தக ரீதியில் அனுசரணை வழங்கும் ஒரு நிறுவனம் அதை விலக்கிக் கொண்டுள்ளது.