ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளாஸ்கோ 2014: ஆஸி. முன்னிலை, இந்தியா 4ம் இடத்தில்

படத்தின் காப்புரிமை Getty
Image caption ஆஸ்திரேலியா 15 தங்கப் பதக்கங்களை நீச்சல் போட்டிகளில் வென்றுள்ளது

காமன்வெல்த் விளையாட்டு விழாவின் ஐந்தாவது நாள் போட்டிகள் இன்று திங்கட்கிழமை நடக்கின்றன.

முதல் மூன்று நாட்களும் பதக்கப் பட்டியலில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்தை முந்திக்கொண்டு கடந்த இரண்டு நாட்களாக ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இதுவரை(ஜிஎம்டி நேரம் 17:30 வரை) குறைந்தது 28 தங்கம், 21 வெள்ளி அடங்கலாக 76 பதக்கங்கள் ஆஸ்திரேலியாவிடம் உள்ளன.

இதில் குறைந்தது 15 தங்கங்கள் நீச்சலில் சுவீகரித்தது.

இங்கிலாந்திடம் குறைந்தது 25 தங்கம் 20 வெள்ளி அடங்கலாக 66 பதக்கங்கள் உள்ளன.

போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்திடம் 12 தங்கம் அடங்கலாக 32 பதங்கங்கள் உள்ளன.

மீண்டும் கனடாவை முந்திக்கொண்டு 4-வது இடத்திற்கு வந்துள்ள இந்தியாவிடம் குறைந்தது 7 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 25 பதக்கங்கள் உள்ளன.

இதில் எதிர்பார்த்தபடியே, 4 தங்கம் 7 வெள்ளி அடங்கலாக 12 பதக்கங்களை குறிபார்த்து சுடும் போட்டிகளில் வீழ்த்தியிருக்கிறது இந்தியா.

தமிழக வீரர் சாதனை

Image caption சிவலிங்கம் சதீஸ்குமார் (22 வயது)

அடுத்து இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 9 பதக்கங்களை இந்திய வீரர்கள் பளுதூக்கல் போட்டி மூலம் அள்ளியிருக்கிறார்கள்.

இதில் காமன்வெல்த் சாதனை ஒன்றும் முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

தில்லி-2010 காமன்வெல்த் போட்டிகளில் நவுறு வீரர் யூகோ பீட்டர் (Yuko Peter) 148 கிலோ எடை தூக்கி பதித்திருந்த சாதனையை இந்தியாவிலிருந்து இம்முறை கிளாஸ்கோ வந்துள்ள தமிழ்நாட்டு வீரர் சிவலிங்கம் சதீஸ்குமார் முறியடித்திருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் சதிஸ்குமார்- இம்முறை கிளாஸ்கோ விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட-இந்திய பளுதூக்கும் அணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு தமிழராவார்.

77 கிலோ எடைப்பிரிவில் (snatch weightlift) போட்டியில் 149 கிலோ எடை தூக்கி இவர் புதிய சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார்.

தில்லி போட்டிகளில் 69 எடைப்பிரிவில் (snatch மற்றும் clean and jerk போட்டிகள் இரண்டிலும்) காமன்வெல்த் சாதனை படைத்திருந்த ஒதிஸா மாநிலத்தைச் சேர்ந்த கட்டுலு ரவிக்குமார் இம்முறை சதிஸ்குமார் தங்கம் வென்ற 77 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏமாற்றம்

Image caption இலங்கை வீரர் சிந்தன விதானகே

இலங்கையைப் பொறுத்த வரையில், பளூதூக்கும் வீரர்கள் மீதே இம்முறை கிளாஸ்கோ போட்டிகளில் அதிகளவு நம்பிக்கை வைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், அணித் தலைவர் அன்டன் சுதேஷ் பீரிஸ், 62 கிலோ எடைப்பிரிவில் வென்றுள்ள வெள்ளிப் பதக்கம் மட்டுமே இலங்கையின் பதக்கப் பட்டியலில் இதுவரை இடம்பெற்றுள்ளது.

மெல்பர்னில் தங்கமும் தில்லியில் வெள்ளியும் வென்றிருந்த சிந்தன கீதால் விதானகே பதக்கம் வெல்வார் என்று இருந்த நம்பிக்கையும் தகர்ந்துபோனது.

சிந்தன கீதால் விதானகே இம்முறை 69 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு, போட்டியின் மூன்று வாய்ப்புகளையும் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இலங்கை ரக்பி-7 அணியினர் தொடர் தோல்விகள் மூலம் இறுதிச் சுற்றுக்கான தகுதியை இழந்திருந்தாலும்ட்ரினிடாட் அன்ட் டொபேகோ அணியை வெற்றி கொண்டதன் மூலம் காமன்வெல்த் கேடயத்தை (Shield) வென்றுள்ளனர்.

ரக்பி-7 தங்கப் பதக்கத்தை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. வெள்ளிப் பதக்கத்தை நியூசிலாந்தும் வெண்கலப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.