ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளாஸ்கோ 2014: 'இலங்கை பாட்மின்டன் அணி காலிறுதி சென்றதே சாதனை'

படத்தின் காப்புரிமை AFP
Image caption அச்சினி ரத்னசிறி, உப்புலி வீரசிங்க ஆகியோர் இரட்டையர் பிரிவில் காலிறுதியில் இந்தியாவை எதிர்த்தாடுகின்றனர்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் 9-வது நாள் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை நடக்கின்றன.

மொத்தமாகவுள்ள 261 தங்கப் பதக்கங்களில் (ஜிஎம்டி நேரம் 15:30 மணிவரை) குறைந்தது 202 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன.

இங்கிலாந்து குறைந்தது 45 தங்கம், 43 வெள்ளி, 41 வெண்கலம் என 129 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நிலைத்து நிற்கின்றது.

ஆஸ்திரேலியா குறைந்தது 36 தங்கம், 38 வெள்ளி, 42 வெண்கலம் என 116 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கனடா 3-ம் இடத்திலும் ஸ்காட்லாந்து 4-வது இடத்திலும் உள்ளன.

ஐந்தாவது இடத்திலுள்ள இந்தியாவிடம் 13 தங்கம், 20 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தமாக 48 பதக்கங்கள் உள்ளன.

தடகள போட்டிகளில் முதலாவது பதக்கமாக தங்கப் பதக்கத்தை ஷிவ் கவுடா வட்டு எறிதல் (Discus Throw) போட்டியில் வென்றுள்ளார்.

'கருணாரத்ன சகோதரர்கள்'

இதனிடையே, இலங்கை பாட்மின்டன் அணியின் மகளிர் இரட்டையர் அணி, காமன்வெல்த் வரலாற்றில் முதற்தடவையாக காலிறுதிப் போட்டிகளுக்கு நுழைந்துள்ளது.

அச்சினி ரத்னசிறி மற்றும் உப்புலி வீரசிங்க ஆகிய இருவரும் நேற்று வியாழன் இரவு நடந்த போட்டியில் நியுசிலாந்து வீராங்கனைகளான அன்னா ரக்கீன், மெடலீன் ஸ்டேப்ள்டன் ஆகியோரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

இலங்கை வீராங்கனைகள் காலிறுதிவரை முன்னேறியிருப்பதே பெரும் சாதனை தான் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளரான மலேசியாவைச் சேர்ந்த அண்ணாமலை பாஸ்கரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கை பாட்மின்டன் அணி குழுநிலைப் போட்டிகளில் காலிறுதிவரை முன்னேறி தோல்விகண்டிருந்தது.

இதேவேளை, கடந்த சில தினங்களாகவே நடைபெற்றுவரும் ஒற்றையர், இரட்டையர்- ஆடவர் ,மகளிர் மற்றும் கலப்பு போட்டிகளில் இலங்கை பாட்மின்டன் வீர வீராங்கனைகள் மிகத் திறமையாக ஆடிவந்தனர்.

Image caption நிலூக்க கருணாரத்ன

எனினும் மகளிர் இரட்டையரைத் தவிர மற்றவர்களால் மலேசியா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு முன்னால் ஈடுகொடுத்து காலிறுக்குள் நுழைய முடியவில்லை.

இலங்கை அணியின் முதல்நிலை ஆட்டக்காரர்களான நிலூக்க கருணாரத்ன மற்றும் தினூக்க கருணாரத்ன சகோதரர்கள் மீது அதிகம் நம்பிக்கை வைக்கப்பட்டிருந்தது.

எனினும் நிலூக்க கருணாரத்ன ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சிறிகாந்த் கிடாம்பி முன்பாக 2-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

அவரது சகோதரர் தினூக்க கருணாரத்ன மலேசியாவின் முதல்நிலை வீரர் லியூவ் டரனை எதிர்த்து ஆடினார். ஆனால் அவரும் 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.

'அவர்கள் எங்களை விட மிகவும் அனுபவம் கூடியவர்கள். ஓராண்டுக்கு அவர்கள் 20க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றவர்கள். நாங்களோ ஆறோ ஏழோ போட்டிகள் தான் விளையாடுவோம்' என்றார் தினூக்க கருணாரத்ன.

இந்திய வீரர்கள் அபாரம்

இன்று நடக்கின்ற காலிறுதிப் போட்டிகளில் இந்திய பாட்மின்டன் அணியிலிருந்து இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் பாருப்பள்ளி மலேசியாவின் தரன் லியூவை வெற்றிகொண்டுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து நியூசிலாந்தின் அனா ரான்கினை வெற்றிகொண்டுள்ளார்.

ஆர்.வி. குருசாய்தத், மலேசிய வீரரையும் சிறிகாந்த் கிடாம்பி சிங்கப்பூர் விரரையும் எதிர்த்து ஆடுகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் பீ.சி. துளசி மலேசிய வீராங்கனையை எதிர்த்து காலிறுதியில் ஆடுகின்றார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான மகளிர் இரட்டையர் போட்டிகள் நடக்கின்றன.