கிளாஸ்கோவில் இந்திய விளையாட்டு அதிகாரிகள் இருவர் கைது

படத்தின் காப்புரிமை AP
Image caption 'கைதுசெய்யப்பட்டவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான குடியிருப்பு கிராமத்தில் தங்கியிருந்தவர்கள் அல்ல' (படம்:தொடக்கவிழா)

காமன்வெல்த் விளையாட்டு விழா நடைபெறுகின்ற கிளாஸ்கோ நகரில் இந்திய விளையாட்டுத்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து காவல்துறையினர் பிபிசி தமிழோசையிடம் உறுதிசெய்துள்ளனர்.

சனிக்கிழமை நடந்த இருவேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 49- வயது ஆண் ஒருவரும் 45- வயது ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளாஸ்கோ விளையாட்டு விழா கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த கைதுகள் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ராய்ட்டர்ஸ் நிறுவனம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும் இந்திய மல்யுத்த போட்டி நடுவர் ஒருவர் தாக்குதல் குற்றத்திற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி கூறியுள்ளது.

இவர்கள் கிளாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய விளையாட்டு அணியில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முன்னர் விபரமான அறிக்கை ஒன்றுக்காக காத்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.