ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வென்றார்

படத்தின் காப்புரிமை AP
Image caption தங்கம் வென்ற மகிழ்ச்சியில் மேரி கோம்

இன்ச்சியானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார்.

மகளிருக்கான ஃப்ளைவெயிட் பிரிவில், அவர் கசகஸ்தானைச் சேர்ந்த ஷாய்னா ஷெகெர்பெகோவாவை 2-0 எனும் கணக்கில் வென்றார்.

ஐந்து முறை உலகப் பட்டத்தை வென்றுள்ள மேரி கோம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவரது வெற்றியை அடுத்து இன்ச்சியானில் நடைபெற்று வரும் 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம் மூன்று பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக சர்வதேச அளவில் மகளிர் குத்துச் சண்டைப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுள்ள மேரி கோம், சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தால் ‘மேக்னிஃபிஷெண்ட் மேரி’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

மிகவும் வறிய குடும்பம் ஒன்றில் பிறந்த மேரி கோம், இன்று உலகளவில் ஆளுமை மிகுந்த ஒரு பெண்மணியாக திகழ்கிறார் என்று விளையாட்டு வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.

கடந்த 1998 ஆம் ஆண்டு மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், குத்துச் சண்டையில் தங்கம் வென்றதை அடுத்து, தனக்கும் குத்துச் சண்டை பயில வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக மேரி கோம் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக உயரிய வருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மபூஷன் உட்பட பல விருதுகளை மேரி கோம் பெற்றுள்ளார்.

லண்டனில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.