ஆசிய விளையாட்டு : ஹாக்கிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது

படத்தின் காப்புரிமை AFP
Image caption வெற்றிக் களிப்பில் இந்திய ஹாக்கி அணியினர்

தென் கொரியாவின் இன்ச்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தானை 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆடவர் ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

இதன் மூலம் 2016 ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் முழு நேரமான 70 நிமிடங்களில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தன.

இதையடுத்து முடிவு பெனால்டி முறையில் முடிவானது. அதில் இந்தியா பாகிஸ்தான் 4-2 எனும் கணக்கில் வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானின் அணியின் ரிஸ்வான் முகமது ஒரு கோல் அடிக்க பாகிஸ்தான் 1-0 எனும் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் 28 ஆவது நிமிடத்தில் இந்தியாவின் கொத்தஜித் சிங் ஒரு கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 எனும் சமநிலை பெற்றன.

முழு ஆட்ட நேரத்திலும் இதே நிலை தொடர்ந்ததால், போட்டியின் முடிவு பெனால்டி முறைப்படி முடிவானது.