டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார் தோனி

  • 30 டிசம்பர் 2014

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்றும் டெஸ்ட் ஆட்டத்தொடரில், மெல்பர்ணில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்துள்ள பிறகு இந்த அவரது அறிவிப்பு வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption மகேந்திர சிங் தோனி

மெல்பர்ண் நகரில் நடைபெற்ற டேஸ்ட் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நீண்ட நேரம் பேசிய தோனி தன்னுடைய ஒய்வு குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பான அறிவிப்பு இந்தியக் கிரிக்கெட் வாரியத்திடமிருந்தே வந்துள்ளது.

தற்போது 33 வயதான தோனி, 2005 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கினார்.முதல் போட்டியை சென்னையில் இலங்கை அணிக்கு எதிராக ஆடிய அவர் அதில் முதல் ஆட்டத்தில் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மழையின் காரணமாக அந்தப் போட்டி மூன்றாம் நாள் கைவிடப்பட்டது.

அவர் விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 60 போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக இருந்தார்.

டெஸ்ட் ஆட்டங்களின்போது இந்திய கிரிக்கெட் அணியை தலைமை தாங்கிய மிக சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை புகழ்ந்துள்ளது.

தோனியின் இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் மதிப்பதாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பங்குக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டில் 20-20 கிரிக்கெட் உலக கோப்பையை தோனியின் தலைமையில் இந்தியா வென்றதையடுத்து, 2008 ஆம் ஆண்டில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைவராக பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை கூட்டாக நடத்திய 50 ஓவர்களைக் கொண்ட உலகக் கோப்பையையும் தோனி தலைமையிலான அணி வென்றது.

தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக தரவரிசையில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை முன்னிலை வகித்தது.

எனினும் அதையடுத்து 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் 4-0 என்ற கணக்கில் இந்தியா படுத்தோல்வி அடைந்தது. அப்போதே தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று கருத்துக்கள் பரவலாக வெளிவந்தது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption தோனியால் ஒரு நாள் போட்டிகளில் பெற்ற வெற்றிகளை டெஸ்ட் போட்டிகளில் பெறமுடியவில்லை

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தோற்றதையடுத்து, தோனி மீதான அழுத்தங்கள் மேலும் அதிகரித்தன. முன்னாள் கேப்டனான கங்கூலி, தோனி டேஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேணடும், கோலியை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

தோனி ஓய்வு பெற்றுள்ளதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் ஆட்டத்தொடரின் நான்காவது ஆட்டத்திற்கு விராட் கோலி தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி இந்தப் போட்டித் தொடரில் இதுவரை மூன்று சதங்களை அடித்துள்ளார்.