பெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது

படத்தின் காப்புரிமை AP

இரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது, இருவரை பெல்ஜியம் போலிசார் தடுத்து வைத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நபர், கிழக்கில் உள்ள வெர்வியர்ஸ் நகரிலும் மற்றொருவர் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் உள்ள டூர்னை என்ற நகரிலும் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றார் அவர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், ஞாயிறன்று நடைபெற உள்ள பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி அணிகள் இடையேயான யூரோ 2016 கால்பந்து ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக உறுதி செய்ய முடியாத தகவல்கள் சொல்கின்றன.

கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதல்களின் போது 32 பேர் கொல்லப்பட்டார்கள்.

அப்போதிருந்தே பெல்ஜியம் உஷார் நிலையில் உள்ளது.