விம்பிள்டன்: ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், உலகின் டென்னிஸ் தரப்பட்டியலில் முதல் ரேங்க் பெற்ற, தற்போதைய விம்பிள்டன் சாம்பியனான, நோவாக் ஜோக்கோவிச், அமெரிக்க வீரர் சாம் குவெர்ரேயிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்து விம்பிள்டன் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.

படத்தின் காப்புரிமை epa
Image caption சாம்பியனை வீழ்த்திய குவெர்ரே

டென்னிஸ் தரப்பட்டியலில் 28வது இடத்தில் இருக்கும் குவெர்ரே , 7-6 ( 8-6), 6-1, 3-6, 7-6 (7-5) என்ற கணக்கில் ஜோக்கோவிச்சைத் தோற்கடித்தார்.

வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சனிக்கிழமை நடந்தது.

நேற்று மாலை நடந்த போட்டியில் தோற்றதன் மூலம், 30 போட்டிகளில் முதல் முறையாக ஒரு 'கிராண்ட் ஸ்லாம்' போட்டியில் ஜோக்கோவிச் தோற்றிருக்கிறார்.

கடந்த ஏழாண்டுகளில் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இரண்டாவது வாரத்துக்குள் செல்ல ஜோக்கோவிச் தவறுவது இதுவே முதல்முறையும் கூட.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அதிர்ச்சி தோல்வி அடைந்த ஜோக்கோவிச்
சாதனையை நிகழ்த்தத் தவறிய ஜோக்கோவிச்

இந்த விம்பிள்டன் போட்டியில் மூன்றாவது முறையாக தொடர்ந்து வென்று, இந்த காலண்டர் ஆண்டில் மூன்றாவது முறையாக ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியை வென்ற பெருமையைப் பெறலாம் என்று ஜோக்கோவிச் நம்பியிருந்தார்.

ஏற்கனவே அவர், ஆஸ்திரேலிய மற்றும் பிரெஞ்சு ஒப்பன் போட்டிகளை இந்த ஆண்டு வென்றிருக்கிறார்.

ஐந்து முக்கிய போட்டிகளை தொடர்ச்சியாக வெல்லும் ஒரே இரண்டாவது வீரர் என்ற பெருமையப் பெற முயன்று கொண்டிருந்தார் ஜோக்கோவிச்.

அவர் 100 சதவீத உடல் நலத்துடன் இருக்கிறாரா என்று கேட்டதற்கு , " உண்மையில் இல்லை; ஆனால் அதைப் பற்றிப் பேச இது தருணமும், இடமும் அல்ல. என்னை எதிர்த்து ஆடியவர் மிகவும் நன்றாக ஆடினார் . அவர் வெற்றி பெறத் தகுதி வாய்ந்தவர் ", என்றார் ஜோக்கோவிச்.

இதனிடையே, டென்னிஸ் தரப்பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் பிரிட்டனின் ஆண்டி மர்ரி , ஆஸ்திரேலியரான ஜான் மில்மேனை 6-3, 7-5, 6-2 என்ற கணக்கில் தோற்கடித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.