சிறிய விமானத்தில் பயணிக்க மறுத்த நைஜீரிய கால்பந்தாட்ட அணி: ரியோ பயணம் தாமதம்

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் நைஜீரிய கால்பந்தாட்ட அணி இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பிக்க உள்ள தொடக்க ஆட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக பிரேசில் வர உள்ளது.

வீரர்களை ஏற்றிக் கொண்டு பறக்கவிருந்த விமானம் சிறியதாக இருந்ததாக வீரர்கள் கூறி, அதில் பயணிக்க மறுத்ததுதான், இந்த கால தாமதத்திற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இறுதியில், அமெரிக்காவில் இருந்து பிரேசில் நகரமான மனாஸ் வர பெரிய விமானம் ஒன்று ஏற்பட்டு செய்யப்பட்டது. அங்கு அவர்கள் ஜப்பான் அணியை எதிர் கொள்ள உள்ளனர்.

பிரேசிலுக்கு வருவதற்கு விமானக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் கால்பந்தாட்ட அணி வீரர்கள் அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்பட்டது.

சிக்கலான தொடர் வங்கிக் கணக்குகளை கடந்து வர வேண்டி இருந்ததாலும் மற்றும் நாணய மாற்றத்தில் ஏற்பட்ட சிக்கலாலும், செவ்வாய்க்கிழமை வரை சொல்லப்பட்ட பணம் விமான நிறுவனத்திற்கு வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.