ரியோ ஒலிம்பிக் 7வது நாள்: இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது

படத்தின் காப்புரிமை Getty Images

ரியோ ஒலிம்பிக் போட்டியின் ஏழாவது நாளான வெள்ளிக்கிழமை அமெரிக்கா ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை அதுவும் தங்கப்பதக்கத்தை ஃபிஜி தீவு வென்றுள்ளது.

ஏழு பேர் விளையாடும் ஆண்கள் ரக்பி விளையாட்டில் பிரிட்டனை தோற்கடித்து ஃபிஜி அணி பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஃபிஜி வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம் என்று கூறிய ஃபிஜி தீவின் பிரதமர் ஃப்ராங்க் பைனிமராமா, இதை கொண்டாடும் விதமாக மேலும் ஒரு பொது விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை AP

இன்னொரு பக்கம், அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் ஆண்கள் 200 மீட்டர் தனிநபர் நீச்சல் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் தனது 22-வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். அவர் ரியோ ஒலிம்பிக்கில் பெறும் நான்காவது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யாவின் தடகளப் பயிற்சியாளர் ஜான் அன்ஸ்ராவை நாட்டுக்குத் திருப்பியனுப்ப எடுக்கப்பட்ட முடிவால் தடகள நிகழ்வுகளை தடுமாறச் செய்தது.

ஜான் அன்ஸ்ரா தன்னை அணியின் இன்னொரு விளையாட்டு வீர்ராக குறிப்பிட்டு அவருக்கு பதிலாக சிறுநீர் மாதிரிகளை வழங்கிய பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கத்தை வென்ற கென்யாவின் ஒலிம்பிக் தலைவர் கிப் கெய்னோ தங்கள் அமைப்பு, இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் அணியோடு தன்னையும் இணைத்து குழப்பியுள்ளார். அவர் சரியானதை செய்யவில்லை. நாங்கள் கென்யர்களாக விளையாட்டில் பங்குபெற இங்கு வந்துள்ளோம். எங்களுடைய விளையாட்டு வீரர்களில் யாரும் தவறாக நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரு நேர்மையான விளையாட்டு போட்டிகளை தான் நாங்கள் விரும்புகின்றோம் என்று கிப் கெய்னோ கூறினார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் சைமன் மானுவெல் மற்றும் கனடாவின் பென்னி ஒலெக்சியாக் கூட்டாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சைமன் மற்றும் பென்னி

ரியோ ஒலிம்பிக் போட்டியில், முதல் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை சைமன் பெறுகிறார். அவருக்கு வயது 20. அதே சமயம், கனடா சார்பாக இந்த போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார் பென்னி. அவருடைய வயது 16. இரு வீராங்கனைகளும் 52.70 நொடிகளில் இலக்கை அடைந்து புதிய ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தொடர் தோல்வியை சந்தித்த இந்தியா

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கிச்சுடுதல் தகுதிப் போட்டியில் இந்தியாவின் ககன் நாரங் மற்றும் செயின் சிங் தோல்வியை தழுவி உள்ளனர்.

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் தோல்வியை தழுவியுள்ளார்.

படத்தின் காப்புரிமை REUTERS

வில்வித்தை போட்டியில் தனி நபர் பிரிவில், இந்திய அணி சார்பில் போட்டியிட்ட அடானு தாஸ் தோல்வியை தழுவி உள்ளார். இதன் மூலம், வில்வித்தையில் இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது.

வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் விகாஸ் கவுடா தோல்வியை தழுவியுள்ளார்.

800 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் 25-ஆவது தர நிலையை பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.