ஒலிம்பிக் ஹாக்கி: காலிறுதியில் இந்தியா தோல்வி
இன்று நடந்த ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில், பெல்ஜியம் அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று இந்திய அணி வெளியேறியுள்ளது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இன்றைய காலிறுதிப் போட்டியின் தொடக்கத்தில் ஒரு கோல் அடித்து, இந்திய அணி முன்னிலை பெற்றது. இரண்டாம் பகுதி முடியும் தருவாயில், பெல்ஜியம் அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.
இதன் பின்னர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய பெல்ஜியம் அணியின் வேகத்துக்கு இந்திய அணியால் ஈடு கொடுக்க முடியவில்லை. பெல்ஜியம் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட, அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிகளில் கடைசியாக 1980-ஆம் ஆண்டில் தான் இந்திய அணி பதக்கம் வென்றது. மாஸ்கோவில் நடந்த 1980 ஒலிம்பிக் போட்டியில், பாஸ்கரன் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்கு பிறகு பல ஒலிம்பிக் போட்டிகளை கடந்தும், இந்திய ஆடவர் ஹாக்கி அணியால் பதக்கம் வெல்ல முடியவில்லை.