இந்தியாவின் பதக்க கனவுக்கு உயிரூட்டியுள்ள பி.வி. சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

2016 ஒலிம்பிக் போட்டிகளில், இது வரை எந்த பதக்கமும் வெல்லாத இந்தியாவுக்கு, பதக்கம் பெற்று தருவார் என்ற சமீபத்திய நம்பிக்கை நட்சித்திரமாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மாறியுள்ளார்.

நேற்றிரவு தற்போதைய உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை, 21 வயதாகும் சிந்து அதிர்ச்சி தோல்வியடைய செய்தார்.

கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற 28 வயதாகும் வாங், நேற்றைய போட்டியில் வென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

சமூக வலைத்தளங்களில், பலரும் சிந்துவின் சாதனையை பாராட்டி, அவர் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவார் என்ற தங்களின் நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளனர். .

54 நிமிடங்கள் நடந்த நேற்றைய போட்டியில், வாங்கை 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வென்றார்.

வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ள அரையிறுதி போட்டியில், ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.