தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு குவியும் பரிசும், பாராட்டும்

பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு பரிசும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

தங்கப் பதக்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு, இரண்டு கோடி ரூபாயை தமிழக அரசு பரிசாக அறிவித்துள்ளது. இந்திய விளையாட்டுத் துறை 75 லட்ச ரூபாயை பரிசாக வழங்கியுள்ளது.

பாராலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, மாரியப்பனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்கள், உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த மணல் சிற்பத்தில் மூவர்ண கொடியின் மேலே பதக்கம் இருக்க அந்த பதக்கத்தின் மீது நாயகர்களுக்கு பாராட்டுக்கள் என்று எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு மிகவும் எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்.

சேலம் மாவட்டத்தின் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனின் தந்தையான தங்கவேலு, செங்கல் சூளையில் பணியாற்றிவருகிறார். இவரது தாய் சரோஜா காய்கறி வியாபாரம் செய்துவருகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

21 வயதாகும் மாரியப்பன், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது.

பள்ளிப் பருவத்திலேயே மாரியப்பனின் திறமையை அடையாளம் கண்டு ராஜேந்திரன் என்ற உடற்கல்வி ஆசிரியர் அவருக்குப் பயிற்சியளித்து வந்தார்.

பள்ளி நாட்களிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய மாரியப்பன், 2007-08 ஆம் ஆண்டில், மாவட்ட அளவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதற்குப் பிறகு 2011-ல் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

2012 இல் நடந்த சர்வதேச உயரம் தாண்டும் போட்டியிலும் பதக்கத்தை வென்றார் மாரியப்பன்.

தொடர்புடைய தலைப்புகள்