முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி விவகாரம்: ஐ.நா நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசப் படையினரால் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தங்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டது அல்லது ரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டது என முன்னாள் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் அரச சட்டத்தரணிகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption எதிரிகளின் முக்கிய புள்ளிகளை அழிப்பதற்கு ரசாயனங்களை அவர்களுடைய உடல்களில் செலுத்தியிருக்கலாம் என்கிறது தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு

சர்வதேச மட்டத்தில் தரமும் தகுதியும் வாய்ந்த மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழுவொன்றை அமைத்து, இவ்வாறு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகளை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இத்தகைய மருத்துவ நிபுணர்களைக் கொண்ட விஞ்ஞானிகள் குழு இலங்கை அரசின் அனுமதி பெற்று இங்கு வந்து பரிசோதனைகளை நடத்துவதுடன், அந்தப் பரிசோதனையின் பின்னர் அந்தக் குழு சமர்ப்பிக்கின்ற அறிக்கைக்கு அமைவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் சட்டத்தரணிகள் கோரியிருக்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் ராணுவத்தினர் தமது எதிரிகளையும் தமக்கு எதிரான முக்கிய புள்ளிகளையும் இலக்கு வைத்து இவ்வாறான விஷம் கலந்த ஊசி மருந்து ஏற்றியிருக்கின்றார்கள். அதேபோன்று அவர்களை செயலிழக்கச் செய்வதற்கும் அழிப்பதற்கும் ரசாயனங்களை அவர்களுடைய உடல்களில் செலுத்தியிருககின்றார்கள் என தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

அத்தகைய நாடுகள் சிலவற்றின் ராணுவ உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை இலங்கை அரசு விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிப்பதற்குப் பெற்றிருந்தது. அந்த வகையில் இத்தகைய விஷம் கலந்த மருந்து அல்லது இரசாயனம் முன்னாள் விடுதலைப்புலிகளின் உடல்களில் ஏற்றப்பட்டிருக்கலாம். ஆகவே, அவர்கள் தெரிவித்துள்ள விஷ ஊசி விவகாரத்தை முக்கிய விடயமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டிருக்கின்றது.

படத்தின் காப்புரிமை Science Photo Library
Image caption சர்வதேச தரமும் தகுதியும் வாய்ந்த மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு பரிசோதனை செய்ய கோரிக்கை

இந்த முறைப்பாடு தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேநேரம் மிகவும் நுணுக்கமான தொழில்நுட்ப விடயமாகிய இந்த விஷ ஊசி விவகாரத்தை உள்ளுர் மருத்துவர்கள் கையாள்வது கடினம் என்றும், அதற்குரிய வசதிகள் இங்கு இல்லை என்பதாலும், இந்த விடயத்தில் ஐநா தலையிட்டு, சர்வதேச மருத்துவ நிபுணர்கள் அடங்கிய விஞ்ஞானிகள் குழுவொன்றை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பு கோரியிருக்கின்றது.

இதேவேளை, விஷ ஊசி ஏற்றப்பட்டதாக சந்தேகம் கொண்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்திருக்கின்றது.

இவ்வாறு ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் வடமாகாணத்தின் மாவட்ட வைத்தியசாலைகளில் இந்த மருத்துவ பரிசோதனையை செய்து கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் வட மாகாண சுகாதாரத்துறை அமைச்சு கூறியிருக்கின்றது.

தொடர்புடைய தலைப்புகள்