இலங்கை: முன்னாள் அமைச்சர் விமல் மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு விளக்க மறியல்

கருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டு அமைச்சரும், கூட்டு எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் மகிந்தானந்த அலுத்கமகேவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இனறு காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சந்தேக நபர் சட்ட விரோதமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை பயன்படுத்தி கொழும்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், 10 மில்லியன் ரூபாய் அளவுக்கு சட்ட விரோதமான முறையில் சந்தேக நபர் சம்பாதித்துள்ளதாக தெரிவித்த போலீசார், சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டால் அதன் முலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்பட அவகாசம் இருப்பதாக எச்சரித்தனர்.

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபரை, வரும் 22-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, இது ஒரு அரசியல் பழிவாங்கலென்று குற்றம்சாட்டினார்.