இலங்கை: ராணுவ பயிற்சி முகாம்களை மக்கள் இல்லாத இடங்களுக்கு மாற்ற கோரிக்கை

மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி முகாம்களை ஆட்களற்ற பிரதேசத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.

மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான ராணுவ பயிற்சி முகாம்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள சிவசக்தி ஆனந்தன், பயிற்சியின் போது நடத்தப்படும் துப்பாக்கிப் பிரயோகம், குண்டுத் தாக்குதல் ஆகியவற்றால் அந்த பயிற்சி முகாம்களின் அயலில் உள்ள மக்கள் உடல் உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ராணுவ பயிற்சி முகாம்களை மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து மக்கள் இல்லாத பகுதிகளுக்கு அகற்றுமாறு கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மன்னார் மாவட்டம் சன்னார் என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி முகாமில் இருந்து எழுகின்ற குண்டுச் சத்தங்கள் மற்றும் நில அதிர்வு காரணமாக, மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக புதிய அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் அமர்வொன்றின்போது ஊர் பிரதிநிதி ஒருவர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

ராணுவ பயிற்சியின் போது எழுகின்ற குண்டுச் சத்தங்கள் காரணமாக வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என பலரும் அச்சமடைந்து அடங்கி ஒடுங்குவதாகவும், அச்சம் காரணமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பம் கலைய நேர்ந்ததாகவும் அந்த அமர்வின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதே போன்று வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் மற்றும் வவுனியா சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஊர் மனைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ பயிற்சி முகாம்கள் காரணமாக அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது குண்டுச் சத்தங்களுக்கு மத்தியிலும் ஆயுத மோதல்களுக்கு மத்தியிலும் சிக்கி, பெரும் அவலத்துக்கு உள்ளாகிய வன்னிப்பிரதேச மக்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, நிம்மதியாக வாழும் சூழலில் ராணுவ பயிற்சி முகாம்களின் குண்டுச் சத்தங்கள் அவர்களை உளவியல் ரீதியாக போர்ச்சூழல் ஒன்றில் சிக்கியிருப்பது போhன்ற பாதிப்பு தரத்தக்க மன நிலைக்கு ஆளாவதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த ராணுவ பயிற்சி முகாம்களை மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து காட்டுப்பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.