கர்நாடக தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இலங்கைத் தமிழ் கட்சிகள்: சி.வி.விக்னேஸ்வரனும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

யாழ்ப்பாணத்தில் ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்று கூடி, கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலையும் கரிசனையும் தெரிவித்து யாழ் துணைத் தூதர் மூலம் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றன.

Image caption இந்தியத் துணைத் தூதரிடம் மனுக்கொடுக்கும் கட்சிப் பிரதிநிதிகள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதம் வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதர் நடராஜனிடம் கையளிக்கப்பட்டது.

கர்நாடகாவில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள இந்தக் கட்சிகள் தமிழகத்தில் உள்ள கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கோரியிருக்கின்றன.

Image caption தமிழர்களுக்கு தார்மிக ஆதரவு

இதேவேளை, கர்நாடகாவில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், அங்கு மேலும் வன்முறைகள் நடைபெறாத வண்ணம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண தமிழ் மக்கள் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியிருக்கின்றார்.

வன்முறைகளின் துயரங்களை நேரடியாக அனுபவித்துள்ள வடமாகாண தமிழ் மக்கள் கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்து அவர்களுக்குத் தமது அனுதாபத்தையும் ஆறுதலையும் வெளியிட்டிருக்கின்றனர் என அந்தக் கடிதத்தில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக முதல்வருக்கும் தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும் வடமாகாண முதலமைச்சர் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கிடையில், கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் எதிரில் மூவர் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர்.