இலங்கை பௌத்த வழிபாட்டு தல உற்சவத்தில் யானை தாக்கி ஒருவர் பலி

இலங்கையில் பௌத்த வழிபாட்டு தல உற்சவமொன்றில் குழப்பமடைந்த யானையின் தாக்குதலில் 60 வயது பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

Image caption ஊர்வலம் புறப்பட தயார் படுத்தியபோது யானை குழப்பமடைந்து மக்களை தாக்கியுள்ளது

நேற்று வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண்கள் உட்பட 12 பேர் இரத்தினபுரி அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பெண் சிகிச்சை பலனின்றி பின்னர் இறந்தார்.

ஏனைய 11 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மஹா சமன் தேவாலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளில் உற்சவத்தின் பெரஹர என்று அறியப்படும் ஊர்வலம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவிருந்த வேளை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெரஹர ஊர்வலம் புறப்படுவதற்கு யானையை தயார் படுத்திக் கொண்டிருக்கும் போது யானை குழப்பமடைந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக போலிஸ் ஊடகப் பிரிவு கூறுகின்றது.