இலங்கை: காவல் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டமைப்பு வசதி உருவாக்க உத்தரவு

நாட்டில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்திலும் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் உட்செல்வதற்கான வசதி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அவர்களின் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தென்பகுதி அபிவிருத்திக்கான அமைச்சர் சாகல ரட்நாயக்க, காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Image caption புதிய காவல் நிலையங்கள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகரிலும், வவுனியா மாவட்டம் நெடுங்கேணி நகரிலும், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களைத் திறந்து வைத்ததுடன் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆராய்ந்தார்.

வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் சகிதம் இந்த வைபவங்களில் அவர் கலந்து கொண்டார்.

Image caption புதிய காவல் நிலையங்கள் திறப்பு

யுத்த மோதல்கள் காரணமாக நேர்ந்துள்ள சொத்துக்கள் மற்றும் உயரிழப்புகளுடன் மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையிலான நல்லறவும் சீர்குலைந்திருக்கின்றது. புதிய காவல் நிலையங்களை நிர்மாணிக்கின்ற அதேவேளையில், இந்த நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழ்ப் பிரதேசங்களில் பணியாற்றுகின்ற காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவுகின்ற மொழிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக காவல்துறையினருக்கு தமிழ் மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், காவல் துறையில் புதிதாக இணைந்து கொள்பவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் காவல் நிலையத்திற்குள் இலகுவாக வந்து செல்வதற்குரிய பாதை அமைப்பும், அவர்களின் பயன்பாட்டிற்கான சக்கர நாற்காலி வசதியும் காவல் நிலையங்களில் எற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதற்காக நல்லாட்சி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் குற்றங்கள் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கைகளை எடுப்பதிலும் பார்க்க குற்றங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்