இலங்கை: போலீஸ் நிலையத்தில் உயிரிழந்த தமிழ் கைதியின் மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள புஸல்லாவ போலீஸ் நிலைய கைதிகள் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் கைதியின் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள பெருந்தோட்ட மக்கள் நீதி விசாரணை கோரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருந்தோட்ட மக்கள் கோரிக்கையையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி வாசக அட்டைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியும் போலீஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தின் போது கண்டி - கொழும்பு வீதியில் டயர்களை போட்டு எரித்தும் போக்குவரத்து தடைகளும் ஏற்படுத்தப்பட்டன .

இதனையடுத்து அந்த இடத்தில் சில மணித்தியாலங்கள் பதட்டமான நிலைமை காணப்பட்டது. மலையக புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்தனர். .

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு அவர்களால் உறுதிமொழியும் உத்தரவாதமும் வழங்கப்பட்ட நிலையில் ஆர்பாட்டம் முடிவுக்கு வந்தது.

அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் வேலு குமார் ஆகியோர் போலிஸ் நிலையத்திற்கும் நேரில் சென்று கைதிகள் கூண்டையும் பார்வையிட்டனர்

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கைதிகள் கூண்டையும் இது தொடர்பாக போலிஸ் தரப்பு கூறுவதையும் பார்க்கும் போது இம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலு குமார் ''பிபிசி தமிழோசை" க்குத் தெரிவித்தார்

இந்த மரணம் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரனை தேவை என போலீஸ் மா அதிபரை தாங்கள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த 28 வயதான நடராசா ரவிச்சந்திரன் என்ற இக்கைதி ஏற்கனவே குற்றச்சாட்டொன்றின் பேரில் போலீஸாரால் கைதாகி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டிய நாட்களில் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய கூண்டில் அடைக்கப்பட்டிருந்தார்.

சனிக்கிழமை இரவு கைதிகள் கூண்டு ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

Image caption கைதிகள் கூண்டு ஜன்னல் கம்பி

அந்த பகுதியிலுள்ள அரச மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற நிலையில் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இந்த மரணம் தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இரு போலீஸார் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய தலைப்புகள்