இலங்கை: பிள்ளைகள் இறந்ததால் சோகம் தாங்காமல் பெற்றோரும் தற்கொலை

இலங்கையில் கிழக்கு மாகாணத்திலுள்ள கடலோர கிராமமொன்றில் தங்களின் இரு ஆண் பிள்ளைகளும் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல் அறிந்த பெற்றோர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

Image caption மீள முடியாத சோகத்தில் உறவினர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பட்டியடிச்சேனை என்னும் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்நால்வரின் பரிதாபகரமான மரணம் அந்த பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பாசிக்குடாவிற்கு அண்மித்த கல்குடா கடலில் குளிக்கச் சென்றிருந்த சகோதரர்களான 20 வயதான சன்முகம் சதீஸ்குமார் மற்றும் 18 வயதான சன்முகம் சுரேஸ் அகிய இருவரும் கடலில் மூழ்கி பலியானார்கள்.

கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இதுவரையில் ஒருவரது சடலம் தான் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அவர்களது நண்பர்களான இருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமது இரு ஆண் பிள்ளைகளும் கடலில் மூழ்கி பலியான சோகத்தில் காணப்பட்ட பெற்றோர்களான 54 வயதான வேலுப்பிள்ளை சன்முகம் அவரது மனைவி 45 வயதான யோகலட்சுமி ஆகியோர் அவர்களது வீட்டுத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர்

இம்மரணங்கள் தொடர்பாக கல்குடா போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்