புரிந்துணர்வின் அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு: மனோ கணேசன்

இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதன் மூலம் புரிந்துணர்வின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று (திங்கள் கிழமை) யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

Image caption அமைச்சர் மனோ கணேசன்

சகவாழ்வு மேம்பாட்டுக்காக வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிய அரசாங்கம் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்து வருகி்றது ஆனால், அந்த நடவடிக்கைகளில் வேகம் போதாது என்று தமிழ் முஸ்லிம் மக்களும் அதிவேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று சிங்கள மக்களும் கருதுவதாக சுட்டிக்காட்டினார்.

Image caption வடமாகாண ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட2 நாள் கருத்தரங்கு

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதமேந்திப் போராடத் தொடங்கிவிடுவார்களோ என்று சிங்கள மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது. அதிகாரங்களைப் பகிர்ந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கள மக்கள் அனுமதிக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இந்த இரண்டுக்கும் இடையில் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்களின் மூலம், புரிந்துணர்வின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அரச கரும மொழிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இப்போதைய அரசியலமைப்பில் சிங்களம் ஆட்சி மொழி என குறிப்பிட்டு, தமிழும் ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனை சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி என மாற்றம் செய்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம் என்றார் அமைச்சர் மனோ கணேசன்.

மீண்டும் இனமோதல்கள் ஏற்படாத வண்ணம் ஆட்சியாளர்கள் சகல இன அரசியல் தலைவர்களும் கூடி கலந்துரையாடி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முன் வர வேண்டும். இந்த வகையில் சகவாழ்வு மேம்பாட்டுக்கு ஊடகவியலாளர்கள் தங்களாலான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.