ஏறாவூர் இரட்டை கொலைக்கு நீதி கோரி மனித சங்கிலி போராட்டம்

இலங்கையின் கிழக்கேயுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலைக்கு நீதி கோரி இன்று (வியாழக்கிழமை) அப்பிரதேசத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Image caption மனித சங்கிலி போராட்டம்

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த பிரதேசத்திலுள்ள வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவிருந்த நிலையில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Image caption இரட்டை கொலைக்கு நீதி கோரி மனித சங்கிலி போராட்டம்

காலை 8 மணி முதல் முற்பகல் 9 மணிவரை மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான சாலையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர் .

இந்த கொலையை கண்டித்து கொலைக்கு நீதி கோரும் வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களும் அவர்களால் எழுப்பப்பட்டன.

ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில், இந்த மனித சங்கிலி போராட்டத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொலையாளிகள் சார்பாக எவரும் நீதிமன்றத்தில் ஆஜராக கூடாது என்ற கோரிக்கையையும் இந்த போராட்டத்தின் மூலம் சட்டத்தரணிகளிடம் தங்களால் முன் வைக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளரான ஏ.சீ.எம் . ஷயீட் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய அவர், '' இக் கொலை தொடர்பான விசாரனையில் மறைமுக பண பரிமாற்றம் மற்றும் அரசியல் தலையீடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Image caption நீதி கோரும் வாசக அட்டைகளை ஏந்தி போராட்டம்

இந்நிலையில், குற்றப்புலனாய்வு துறை (சி.ஐ.டி )யின் விசாரணை கோரி ஜனாதிபதிக்கு மனுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது " என்று குறிப்பிட்டார்

ஹஜ் பெருநாளுக்கு முதல் நாள் படுகொலை

ஏறாவூர் பிரதேசம் முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது

கடந்த 11-ஆம் தேதி அதிகாலையில், 56 வயதான விதவைத் தாய் நூர்முஹமது உஸைரா, அவரது 32 வயதான அவரது மகள் ஜெஸீரா பானு மாஹிர் ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன

இந்த படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பிரதேச வாசிகள் 5 பேர் உட்பட இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவரான ஜெஸீரா பானு மாஹிரின் கணவருடைய சகோதரனும் கைதாகியுள்ளார். அவரது கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிகிறார்.

தொடர்புடைய தலைப்புகள்