வவுனியாவில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் தகவல்

வவுனியா புறநகர்ப் பகுதியாகிய பண்டாரிகுளத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் விடுதலைப்புலிகளின் கைத்துப்பாக்கி வைக்கத்தக்கதும், தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வெடிப்பொருட்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பட்டியும் வெடிப்பொருட்கள் சிலவும், கண்டெடுக்கப்பட்டிருப்பாதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Image caption வவுனியாவில் விடுதலைப்புலிகளின் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வெடிபொருட்களுடன் அதிகாரிகள்.

இந்தப் பாடசாலையில் இருந்த பழைய கட்டடம் ஒன்றை இடித்து அழித்தபோது, சுவரின் அருகில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த தகர பாரல் ஒன்று கனரக இயந்திரத்தில் சிக்கி வெளியில் வந்துள்ளது.

அந்த தகர பாரலின் உள்ளே பாலிதின் பையில் பாதுகாப்பாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பொருட்களே இவ்வாறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Image caption வவுனியாவில் கண்டெடுக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கைத்துப்பாக்கி, வெடிப்பொருட்கள்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆரம்ப விசாரணைகளை நடத்திய பின்னர் வெடிப்பொருட்களைக் கையாள்கின்ற விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களைப் பாதுகாப்பாக வெடிக்க வைத்து அழிப்பதற்காக அவற்றை விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்றுக் கொண்டு சென்றுள்ளதாகக் காவலதுறையினர் தெரிவித்தீருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பணியாற்றிய கனரக வாகன ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட பலரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்